முதல் நகர்வின் மர்மம்: சதுரங்க960-ல் ஒரு விந்தை
மதியூக மறுமலர்ச்சிசதுரங்கம் ஒரு அற்புதமான விளையாட்டு, எண்ணற்ற வியூகங்களையும் தந்திரங்களையும் தன்னகத்தே கொண்டது. வழக்கமான சதுரங்கத்தை விட மாறுபட்ட தொடக்க நிலைகளைக் கொண்ட சதுரங்க960 (Chess960) விளையாட்டில், இந்த வியூகங்களும் தந்திரங்களும் இன்னும் புதிரானவை. ஒவ்வொரு ஆட்டமும் ஒரு புதிய சவாலாக அமைவதால், இதில் கணிக்க முடியாத திருப்பங்கள் நிகழ்வதுண்டு. இந்த கட்டுரையில், சதுரங்க960 விளையாட்டின் ஆரம்ப நிலைகளில் உள்ள ஒரு விந்தையான முடிச்சை நாம் அலசப் போகிறோம். குறிப்பாக, ஒரு மூலையில் அரசி அமைந்திருக்கும் சில குறிப்பிட்ட ஆரம்ப நிலைகளையும், அதில் பொதிந்துள்ள ஆபத்தான பொறிமுறையையும் ஆராய உள்ளோம். வாருங்கள், இந்த சதுரங்கப் புதிரின் முடிச்சுகளை அவிழ்க்கலாம்!
மூலையில் அரசி இருக்கும் ஆரம்ப நிலைகளை வடிகட்டினால் 240 நிலைகள் கிடைக்கும். மற்றொரு மூலையில் இருக்கும் யானை, குதிரை அல்லது அமைச்சர் போன்ற காய், தனக்கு பாதுகாப்பு அளிக்காத ஒரு காயை ஒட்டியிருக்க வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையில் 240 நிலைகளை வடிகட்டினால் 144 நிலைகள் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக:
குதிரைக்குப் பாதுகாப்பு அளிக்காத அமைச்சர் அருகில் இருக்கலாம். ஆனால் அரசனோ யானையோ அருகில் இருக்கக்கூடாது.
அமைச்சருக்குப் பாதுகாப்பு அளிக்காத குதிரை அருகில் இருக்கலாம். ஆனால் அரசனோ யானையோ அருகில் இருக்கக்கூடாது.
யானைக்குப் பாதுகாப்பு அளிக்காத குதிரையோ அமைச்சரோ அருகில் இருக்கலாம். ஆனால் அரசர் அருகில் இருக்கக்கூடாது.
ஒரு மூலையில் வல்லமை கொண்ட அரசியும், மறுமுனையில் பாதுகாப்பற்ற ஒரு காயும் இருந்தால், வெளிர் ஆட்டக்காரர் பெரும்பாலும் முதல் நகர்வில் அரசியை நகர்த்த முயலுவார். இதற்காக, அரசியின் மூலைவிட்ட பாதையை (b3, b4) அல்லது (g3, g4) நகர்வுகளின் மூலம் திறப்பார். இது பொதுவாக அடர் ஆட்டக்காரருக்கு கலக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்கு அடர் ஆட்டக்காரர் (g6, g5) அல்லது (b6, b5) என்று நகர்த்துவது பெரிய தவறுதலாக முடியும். ஏனெனில், வெளிர் அரசி தனது முதல் நகர்விலேயே பலகையின் மறுமுனையில் இருக்கும் எதிராளியின் பாதுகாப்பற்ற காயை கைப்பற்றிவிடும்.
இந்த நிலையில், நான் மேலே குறிப்பிட்ட 144 ஆரம்ப நிலைகளிலும் இந்த இரு முதல் நகர்வுகளை செய்து பார்த்தேன். பாதுகாப்பற்ற காயை கைப்பற்றிய பிறகு, அந்த நிலையை சதுரங்க பொறியில் (Engine) இட்டு மதிப்பீடு செய்தேன்.
கிடைத்த முடிவுகளில், அரசி கைப்பற்றிய எதிராளியின் பாதுகாப்பற்ற காய் உண்மையில் 10 நிலைகளில் அரசியை சிக்க வைக்கும் ஒரு பொறிமுறையாக (Trap) அமைந்தது. 144 நிலைகளில், 134 ஆட்டங்கள் வெளிர் ஆட்டக்காரருக்கு சாதகமாக அமைந்தன. மீதமுள்ள 10 ஆட்டங்களில், இரண்டாவது நகர்வே அடர் ஆட்டக்காரருக்கு சாதகமாக இருந்தது.
இத்தகைய ஒரு பொறி முதல் நகர்விலேயே வெளிப்பட்டால், வெளிர் ஆட்டக்காரர் எளிதில் அதை கவனிக்கக்கூடும். எனவே, அந்த 10 நிலைகளை மட்டும் சதுரங்க பொறியில் ஆழமாக ஆராய்ந்தேன். அப்போது மேலும் ஒரு ஆச்சரியமான விந்தை தெரிய வந்தது.
அந்த 10 நிலைகளிலும், வெளிர் ஆட்டக்காரர் அந்தப் பொறி இருப்பதை உணர்ந்து, அதில் சிக்காமல் வேறு சிறந்த நகர்வுகளை ஆடினால், சாதகமான ஆட்டங்களின் எண்ணிக்கை 8 ஆகவும். மீதமுள்ள 2 நிலைகள் அடர் ஆட்டக்காரருக்கு சாதகமாக இருக்கும்.
| ஆரம்ப நிலை எண் | மதிப்பீடு |
|---|---|
| 12 | 1.77 |
| 90 | 1.61 |
| 295 | 0.94 |
| 370 | 0.85 |
| 396 | 0.98 |
| 464 | -1.07 |
| 687 | -0.67 |
| 764 | 0.97 |
| 869 | 1.73 |
| 956 | 1.76 |
வேறுவிதமாகக் கூறினால், அந்த இரண்டு ஆரம்பநிலைகளில் வெளிர் ஆட்டக்காரரின் முதல் நகர்வே தவறானதாக இருக்கலாம்.
கீழுள்ள ஆட்டம் உலகின் தலைசிறந்த சதுரங்க கணிப்பொறியான @Stockfishnews ஐ அதனுடனேமோத செய்து பெறப்பட்டது. இவ்வாட்டத்தில் வெளிர் நிறத்தில் முதல் நகர்த்தலை மட்டும் உள்ளிட்டேன். அதாவது மேற்கண்டறியப்பட்ட ஆசையைத் தூண்டும் தவறான முதல் நகர்த்தல். முதல் நகர்த்தல் தொடங்கி இறுதிவரை அடர் நிறம் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்தக் கட்டுரையின் மூலம், சதுரங்க960 விளையாட்டின் ஆரம்ப நிலைகளில் உள்ள ஒரு விந்தையான பொறியை நாம் கண்டறிந்தோம். ஒரு மூலையில் அரசியும், மற்றொரு மூலையில் பாதுகாப்பற்ற காயும் இருக்கும்போது, முதல் நகர்விலேயே ஆபத்து காத்திருக்கலாம் என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, 144 ஆரம்ப நிலைகளில் இருந்து வடிகட்டப்பட்ட 10 நிலைகள், அரசியை சிக்க வைக்கும் பொறிமுறையைக் கொண்டிருந்தன என்பது வியப்பளிக்கிறது. கணினி ஆய்வுகளின் முடிவுகள் துல்லியமாக இருந்தாலும், மனிதர்கள் விளையாடும்போது ஏற்படும் தவறுகளும், கவனக்குறைவும் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கலாம். எனவே, சதுரங்க960 விளையாடும்போது, ஒவ்வொரு நகர்வையும் கவனமாக சிந்தித்து விளையாடுவது அவசியம்.
இந்த கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்!
நன்றி
